Sunday, October 31, 2010

பதியாமல் விட்டது

நிலாக்காட்டி சோறூட்டிய அம்மா தான்





ஒரு பசிநாளில்





அமாவாசையை நினைந்து





அழுதிருக்கக்கூடும்











கீற்று.காமில் வெளியான கவிதை

Tuesday, October 26, 2010

ஆனந்தவிகடனில் வெளியான கவிதை

சிற்றோடை


சிற்றோடையின் மீது சிறுஇலை

இலைப்படகின்மீது கட்டெறும்பு

கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு

சின்ஞ்சிறு பாரத்தோடும்

மெலிதானத் துடிப்போடும்

காற்றின் திசையில்

நகர்ந்தபடி இருக்கின்றது

அதன் பெருவாழ்வு

Friday, October 22, 2010

உயிர்மை மற்றும்ஆனந்தவிகடனில் வெளியான எனதுகவிதை

இசை நடனம் 





 சின்னக்குழந்தை
தன் சின்னச்சின்னப் பாதங்களை
இப்பூமியல் எடுத்துவைக்கிறது
 வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்
அதன் பாதணியிலிருந்து
சீழ்கையொலி எழும்புகிறது
பிஞ்சின் நடை பதற்றம் கண்டு
தாயன்பு தவிக்கிறது
சின்னக்குழந்தை
சிரித்தபடி நடக்கின்றது
சங்கீதத்தின் மீது

Thursday, October 21, 2010

காணாமல் போகிறவர்கள்

காணாமல் போகிறவர்களை
எங்கேயிருந்து தேடத்துவங்குவது என்று யாருக்குமே தெரிவதில்லை

 காணாமல் போகிறவர்கள் அகப்படாதபோது
தேடிப்போனவர்கள் தொலைந்துபோன
மனோபாவத்துடன்  திரிகிறார்கள்

காணாமல் போகிறவர்கள்
யாராலோ தொலைக்கப்படுகிறார்கள்?

வீடு திரும்ப முயலாதவர்ளே     
தொலைந்து போகிறார்கள்

காணாமல் போகிறவர்கள்
எதையோ தேடித்தொலைகிறார்கள்

காணாமல் போகிறவர்கள் தேடுபவர்களுக்கு
மர்மத்தடங்களை திறந்து விடுகிறார்கள்

வெகு நாட்க்கள்வீடு திரும்பாதவர்கள் 
பலவந்தமாக இறந்தவர்கள் பட்டியலில் இணைக்கப் படுகிறார்கள்.

 காணாமல் போகிறவர்கள் 
மண்ணில் விழுந்த விதையாகிறார்கள்
பிறகு  தளிர் போல
நினைவுகளில் தலைகாட்டுகிறார்கள்

Wednesday, October 20, 2010

உறுமீன் வர காத்திருக்கும் கொக்கு

வாகன நதி பாய்ந்தோடுகிறது 
ஒரு கரையிலிருந்து
மீனைப்போல நீந்தி
மறுகரையைத் தொடுகிறாள் மகள்
ஒற்றைக் கால் தவமிருந்து
கொக்கைப்போல் கவ்விக்கொள்கிறாள் தாய்

நிழல் விளையாட்டு

நிழல் விளையாட்டு 
யானை .குதிரை ,நாய்,முயல் ,பூனை ,பறவை 
இன்னபிற உருவங்களை 
விரல் திறமையில் 
இரவு ச்சுவற்றில்  உயிர்ப்பித்த
கோசி என்கிற கோ.சிற்றரசு இன்று உயிருடனில்லை
நிழலை நிஜமென்று நிரூபித்தவன்
நிஜமெல்லாம் நிழலென்று
உச்சி  வெயிலில் கரைந்து போனான் 

Friday, October 15, 2010

உயிரோசையில் வெளிவந்த கவிதை

• உயிரோசையில் வெளிவந்த கவிதையை இங்கு


பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி




ஒரு இலை கூட அசையவில்லை



மரம் உறங்குகிறது



ஒரு இறகு கூட விரியவில்லை



பறவை உறங்குகிறது



இழுபட்ட கவணின்பின்னே



விழிகள் மட்டும் விழித்து கொண்டிருந்தது



*



பிஞ்சுக் கன்னத்தில்



பதிந்த விரல்கள்



விம்முகிற குழந்தையிடம்



கேட்டுக் கொண்டிருந்தேன்



எப்போதும் பெற முடியாத மன்னிப்பை



*



கட்டைவிரல்



ஆள்காட்டிவிரல்



சுண்டுவிரல் என்று



சொல்லிக்கொண்டு வந்தவள்



மோதிரவிரலை மட்டும்



அடகு விரலென்றாள்.



*



இறந்த கட்டெறும்பை



இரைக்கு இழுத்துசெல்லும்



சிற்றெறும்புகளுக்குத்



தெரியவில்லை



தன் மூதாதையர்களைப் பற்றி



*



வீடற்றவனின்



மனைவி மட்டும்



விளித்துக்கொண்டிருந்தாள்



எங்க வீட்டுக்காரரென்று

Thursday, October 14, 2010

சாவித்திரிக்கு வந்து கொண்டிருக்கிற காதல் கடிதங்கள்






உங்களுக்கு சாவித்திரியை தெரியுமா ?


என்று கேட்டால் அடிக்கவருவீர்கள்.



மூக்கு விடைத்து, உதடு சுழித்து

துள்ளத்துடிக்கும் கண்களுடன்

அவர் உங்களுடன் பேச ஆரம்பித்தால்

அந்த நிமிடமே உங்கள் வாழ்வின்

உன்னதத் தருணமென்று உணர்வீர்கள்

முடியாத அவரின் யவனமும், அதிஉச்சத்துள்ளலும்

அருள் பாலிக்கிற அழகும்

எல்லா ஆடவரையும் அடி பணியச்செய் யும்

மலர்ந்தும்,மலராத பாதி மலர் போல பாடலை

எப்போது செவி மடுப்பினும்

அதே ஆடவரை மடி சாய்த்து அழ வைத்துவிடும்

ஒரே கணத்தில் காதலியாகவும்,தோழியாகவும்

தோற்ற மயக்கம் தருவார்.



சாவித்திரியின் சாயலோடு பிறந்த எங்கள் சாவித்திரிக்கு வளரிளம் பருவதிலிருந்து வந்து கொண்டிருக்கிறது

.எண்ணற்ற காதல் கடிதங்கள்

அவள் எதற்கும் பதிலிருத்தியதில்லை

புத்தகங்கள் ஆக கூடினும்

காதல் கடிதங்களின் சுமையை சுமந்துநடந்தாள்



சாவித்திரியின் சாயலோடு சாவித்திரிக்கு

இப்பொழுது வயது நாற்பது



ஆண்டுகள் பலவாகினும்

கதவு திறந்து அவள் வெளிப்படும் தருணத்திற்க்கு

நினைவுகளின் அழுத்தம் தாளாது

தினம், தினம் அவள் வசிக்கும் தெருவில்

திரிந்து கொண்டிருக்கிறார்கள் சுந்தர புருஷர்கள்



முத்தம் போலவே இருக்கின்றது

சிறுமியைப்போல்


நுனி நாவிலிருந்து

எச்சில் நீர் குமிழியை

உந்தி காற்றில் பறக்கவிடுகிறாய்

அது கன்னத்தின் மீது பட்டு உடைகிறது

அது முத்தம் போலவே இருக்கின்றது

Tuesday, October 12, 2010

உயிர்மையில் வெளியான கவிதை 2




ஒரு இடம் காலியாயிருக்கிறது


யாருமற்ற வீட்டில்


விழுந்து புரள்கிறது

செய்தியை வாசிக்கச் சொல்லி

ஒரு கடிதம்





யாருமற்ற தெருவில்

கிடந்து மின்னுகிறது

மர்ம அறையைத் திறக்கச்சொல்லி

ஒரு கள்ளச்சாவி





யாருமற்ற அறையில்

மன்றாடுகிறது

மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி

ஒரு தேநீர்க்குவனள

.



யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்

புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது

மெல்லிய தாழை மணம்



யாருமற்ற வெளியில்

எல்லோருக்கும்

ஒரு இடம் காலியாயிருக்கிறது

உயிர்மை இதழில் வெளியான எனதுகவிதை

பார்த்துக்கொண்டிருந்தேன்.
பார்த்துக்கொண்டிருந்தேன்
ஏமாற்றும் விழிகளை
பொயுரைக்கும் உதடுகளை
களவு போன முத்தங்களை
தீயினும்அஞ்சிய துரோகத்தை
மலிவான புணர்வை
பின் கதவில் வெளியறிய
பிறந்த மேனியை

Monday, October 11, 2010

முடிந்த கோடையில்

நீரைத்தொலைத்த ஆழ்துளைக்கிணறுகள்


பெருமூச்சை தரைக்குஅனுப்புகின்றன

குடிக்க கேட்ட வாய்க்குக் கவிழ்ந்துகொள்கின்றன காலிக்குடங்கள்.

உலர்ந்த நாக்குகள் உதிர்ந்து நத்தைபோல் ஊர்கின்றன.

நிரம்பிய குளங்களோடு வாழ்ந்த பெண்டிரை

காலிக்குடங்கள் கலவரப்படுத்துகின்றன

கையளவு நீரையள்ளி

தண்ணீருக்காக பிரார்த்தனைசெய்கிறாள் சிறுமி ஒருத்தி

செவி மடுத்த இறைவன்

அவசரமாய் உருமாறிவருகிறான்

மாநகராட்சி குடி நீர் திறப்பளானாக

Thursday, October 7, 2010

யுகமாயினிஇதழில் வெளியான எனதுகவிதை 2

ஏறக்குறைய வாழ்க்கை


தண்ணீரை யுடைத்து


சில்லுகள் தெறிக்க

துள்ளுகின்றன மீன்கள்.

அடியாழத்தில் விரித்த வலையின் சுவடுகள்



மேற்ப்பரப்பில் நீண்ட அலகுடன்

காத்திருக்கும் கொக்குகள்

வலைக்குச் சற்றுமேலும்

கொத்தும் அலகிற்குச் சற்றுகீழும



சுதந்திரமாகத்துள்ளித் திரிகின்றன தண்ணீரில் மீன்கள்

Wednesday, October 6, 2010

யுகமாயினிஇதழில் வெளியானஎனதுகவிதை

அகதி

யாருமற்ற வெளியில்


மரங்கள் மண்ணிலிருந்து

இடம் பெயர்ந்து கொள்கின்றன

நாளை மரத்திற்க்கு இலக்கமிட்ட மனிதனும்

கூடு தேடி வரும் பறவைகளும் மனம் பிறழக்கூடும்

வேர்களில் ஒட்டியிருந்த

பிறந்த மண்ணை உதிர்த்தபடி

ஒருமரம் ரகசியமாய் புலம் பெயருகிறது

Monday, October 4, 2010

நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்


எனக்கு தெரியவில்லை.

காத்திருப்போர் பட்டியலிருந்து

வரிசைக்கிரமத்தில் காலியான படுக்கைவசதிக்கு

என் பெயர் வந்ததும்



கையசைத்து வழியனுப்ப

ஒருவரும் அருகில் இல்லாதிருந்ததும்



துயிலும் படுக்கைவசதி

சவப் பெட்டியாகியிருந்ததும்



பயணமற்ற பயணத்திற்க்கு

மரண ஜங்னிலிருந்து பச்சைக் கொடியசைத்து

விடைகொடுத்து அனுப்பிவைத்தவர் கடவுளென்பதும்

எனக்குத் தெரியவில்லை

ஏனெனில்

நான் இறந்து போயிருந்தேன்.


பாரத்பாரதி அழைப்பின் பேரில்  எழுதியது

Sunday, October 3, 2010

கட் அவுட் தலைவர்கள். எழுத நினைக்கிறார்கள்

ஒரு கையில் காகிதம்


மறு கையில் எழுதுகோல்

முகவாயை விரல்களால் தொட்டபடி

எழுத நினைக்கிறார்கள்

கட் அவுட் தலைவர்கள்.

சிலபொய்க் கணக்குகளை,

காற்றில் கரைகிற வாக்குறுதிகளை,

அபத்தமான உலறள்களை,

வயிற்றுப் பிழைப்பு வாதங்களை,

வாங்காத அதிகாரிகளுக்கு இறுதியணைகளை

முட்டாள்வாக்காளனின் சுயமரணக்குறிப்பை




Saturday, October 2, 2010

காலம் காதல்

விடியல் காலையைத் தொடங்கி வைக்கிறது.


காலை பகலைப் பின் தொடர்கிறது.

மாலை இரவிற்குக் காத்திருக்கிறது.

நள்ளிரவு அணைத்துக் கொள்கிறது .

விடாது பெய்கின்றன சொற்களின் மழை

விடாது பெய்கின்றன சொற்களின் மழை


சொற்களில் நனையப் பயந்தவர்கள்

அவசரமாய் ஒதுங்குகிறார்கள்,



சொற்களின் மழையில்

விரல் நீட்டி விளையாடுகின்றன குழந்தைகள்,



காகிதங்களில் கப்பல்கள் செய்து

மிதக்க விடுகிறர்கள் சிறுவர்கள்,



சொற்களில் துலக்கிப்பாத்திரங்களை

மினுமினுப்பாக்குகிறார்கள் பெண்டிர்!



தேங்கிய சொற்களை

தாண்டிச்செல்கிறார்கள் பெரியவர்கள்.



சொற்களில் நனைந்த கவிஞன்

வலிந்த சொற்களில்

இந்த கவிதையைக் கண்டு எடுக்கிறான்