Tuesday, March 29, 2011

தடயங்கள்.







இவ்வாறுதான் தொடங்கவேண்டுமென்பதில்லை,
எப்படியும் தொடங்கலாம்

முதல் சந்திப்பை
மெல்லிய கைக்குலுக்களுடனும்,

முதல் முத்தத்தை
உதட்டுப் பற்தடங்களுடனும். 

காலம் அகாலம்







சுக்கு  நூறாய் உடைந்து
தெறித்த பிறகுதான்
கவனச்சிதறலின்
தன்மைகள் குறித்துத்தெரிகிறது.

இருந்தும்

கை நழுவிக்கொண்டேதானிருக்கிறது
கண்ணாடிகளும்
காலங்களும்.

Monday, March 28, 2011

காதல்காலம்


விடியல்
 இரவை முடித்து வைக்கிறது

இளங்காலையை
நண்பகல் பின்தொடர்கிறது,

பொன்மாலை
 யாருக்கோ காத்திருக்கிறது?

நள்இரவு
 எல்லாவற்றையும் அணைத்துக்கொள்கிறது

Sunday, March 13, 2011

விளையா மழலை






கோடிக்குஞ்சு  மீன்கள்
துள்ளி நீந்தி
இன்னும் வந்து சேராத
என் அடிவயிற்றுக்கடலிலிருந்து
வெடித்துசசிதறுகின்றன
கருவின் முட்டைகள்
மகனோ,மகளோ?  அறியேன்?
காலிடை நழுவுகிறது
மாதவிடாய்க்குருதி.

Friday, March 11, 2011

சிறு வாழ்வு சிறு பயணம்








அணுப் பிளந்து
உயிர் நிரப்பி
கருவறைச்சுவருடைத்து
உலவ விடுகிறது அன்னையின் அருள்.


நனைத்து விடுகிறது மழை

உலர்த்திவிடுகிறது வெய்யில்

சிறகுகள் ஈந்து
பறக்க விடுகிறது காற்று

குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல்

சற்றதிக நேரங்கூடஎடுக்க
விருப்பமில்லை ஒய்வை
களைத்துப் போகும் முன்
வாழ்ந்து விடுவோம்
இச்சிறு வாழ்வை.

  -ரசனை மார்ச்மாத இதழில் வெளியான கவிதை

Monday, March 7, 2011

காதலென்பது காதலே







காதல்
குடை மறந்து
மழை பிரசங்கம் கேட்பது.

தேன் துளிகளை
பழுக்க வைத்து
கனியாக்கி உதிர்ப்பது.
 
நிலா காண்பித்து
நட்சத்தித்திரங்களை ஊட்டுவது.

 ஒவ்வொரு சொல்லுக்கும்
எல்லாவற்றையும் தாரை வார்ப்பது.

ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஒருபூவை மட்டும்பறித்துவருவது

நகர எல்லையில்
விட்டு வந்தும்
வழி தடம் முகர்ந்து
வீடு வந்து சேர்வது.

வசைகளுக்கும் நடுவே
இசை பட வாழ்வது .

உதட்டு மின்கம்பிகளில்
முத்தங்களை கடத்துவது.

Saturday, March 5, 2011

தன்னிலை விளக்கம்










அதற்கு எதன் மீதும் புகாரில்லை
அது புலம்பவில்லை
அதற்கு கோபமில்லை
அது எவரையும் சபிக்கவில்லை
அதற்கு எவ்விதப் பிடிப்புமில்லை
அது எதிர்பார்த்தது அன்பின் கருணையை
அது நிராகரிப்பின் அவமானத்துடனே திரும்புகிறது
அது தனக்குதானே தீர்ப்பளித்துக்கொண்டு
தாய்நூலை அறுத்துக்கொண்டகாற்றாடிபோல
போய் விட்டது .



( மார்ச் மாத ரசனை இதழில் வெளியான எனது கவிதை )

நீ அறியும் பூவே









அத்தனை பெண்களின்
கண்களும் அதன்மீதுதான் !

சடைப் பாம்புகள்
தரை  தீண்டத் துடிக்கும்.

இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள்
தலைவாரி விடும் அம்மாதினமும்.

ரோஜா,

கனகாம்பரம்,

சிலபொழுது மனோரஞ்சிதம்,

எப்பொழுதும் சிறு மல்லிகை இணுக்கு.

இவற்றைத் தின்று வளர்கிறது
என் கருங்கூந்தல்.  
(இம்மாத ரசனை  இதழில் வெளியான எனதுஒருகவிதை)