Friday, April 26, 2013

அறைநகரும் பாடல்கள்









அறைநகரும் பாடல்கள்


தாளிடும் சத்தம்
உடை கலைந்தநிர்வாண அமைதி
அயர்ச்சி
ஆசுவாசிக்கும் சிறு முச்சு
தொடங்கும் நீராடல்

நனைய துவங்குகையில்
சில்லிடும் சிலிர்ப்பு
சிறு நடுக்கத்துடன்
மெலிதான படலொன்றைத்தொடங்கும்.

கதவடியில் தெறிக்கும்
நீர்த்திவளைகளின் சங்கீதம்

நனைந்தபாடல் கரைந்து வழியும்
நீர்வரிகள் வழிந்தோடி சலசலக்கும்

நாசி நீளும் சந்திரிகை
நறுமணத்தோடு மெல்லக்கதவு திறந்து
கூந்தல் நுனிநீர்  சொட்டச்சொட்ட
நனைந்த மஞ்சள் பாதங்களிரண்டு
குளியலறைப் பாடலை
இன்னொரு அறைக்குநகர்த்தும்.

Wednesday, April 24, 2013







மழை கவிதைகள் 

மழை 1 

நெடு நாட்களுக்குப்பிறகு 
பெய்கிறதுமழை 
விழுந்தத்துளிகள் 
இலைகளை 
முழுவதுமாய் தழுவிப்பேசி 
பிரியமனமில்லாது 
இலைநுனிகளின் வாசலில்
இன்னுமிருக்கிறது
சொட்டாது.

மழை 2

ஒவ்வொரு படியாக
குதித்துக்குதித்து இறங்குகிறது
தளிர் மழை
பார்த்துப் பார்த்து எனத்
தவிக்கிறது
தாய் மழை

மழை 3

மழை அனுப்பிவைத்ததை
நனைந்துபெற்றுக்கொண்டேன்

மழை 4

ஒரே மழைதான்
வெவ்வேறு துளிகளில்
நனைகின்றோம் நாம்.

Monday, April 15, 2013







இசைத்தட்டளவு வாழ்கை

சுழலும் இசைத்தட்டளவு
வாழ்க்கை
மெல்லிய ரேகைகள் போலவரிகள்
நாட்கள்
செக்கு மாடு சுற்றுவாழ்க்கை.
அதன் மேல்
ஊசி முனைப் பயணம்.

சட்டென்று
நின்று விடுகிறது
நகர்கிற வாழ்வு சிலருக்கு.

சுற்றுக்கள் முடிந்து
மீண்டும்
சுழல தொடங்குகிறது
தொடக்கத்திலிருந்து மிகச்சிலருக்கு.

நன்றி நவீன விருட்சம்

Friday, April 12, 2013







கைக்குழந்தையுடன் 
பூங்காவைக் கடக்கிறாள்
ஒருத்தி. 
இளம் பிராயத்தில் 
யாரும் அறியாது 
காதலன் 
பறித்துக்கொடுக்கிற
மலர் செடியில்
இன்றும் அதே மலர்
பூத்திருப்பதைக் காண்கிறாள்!
மினுங்கும் கண்களோடும்
கனத்த இதயத்தோடும்
திடீரென்று
பாப்பாவிற்கு
ஒரு முத்தத்தை இடுகிறாள்.
உறக்கதிலிருக்கிற பாப்பா
விருட்டென்று விழித்துக்கொள்கிறது!