Wednesday, December 29, 2010

பெற முடியாதது

பிஞ்சுக் கன்னத்தில்
பதிந்த விரல்கள் விம்முகிற குழந்தையிடம்
கேட்டுக் கொண்டிருந்தேன்
எப்போதும் பெற முடியாத மன்னிப்பை

Tuesday, December 28, 2010

அடுக்குமாடி முத்தங்கள்

அங்கே ஒரு முத்தம்
இங்கே ஒரு உதடு 
அதற்கும், இதற்கும்
எட்டாத  இடைவெளி
அங்கே ஒரு முத்தம் பறக்க ஆரம்பித்தவுடன்
இங்கே ஒரு உதடு ஈரமடைந்து விடுகிறது

Monday, December 27, 2010

வலியெனப்படுவது

சொல்ல நினைத்ததை
 சொல்லத் தயங்கித்  
துடிக்கும்   உதடுகள் .

உறவுகள்
பிரியும் தருணம்  
விலகும்  பெருமூச்சு.

அருந்திய விஷக்கோப்பையில்
  மீந்திருக்கும்
 .இரு கண்ணீர்த்துளிகள்.

இல்லையென்று  விரிக்கும் கரங்களில்
ஒட்டி  கொண்டிருப்பவைகள்

இருக்கிறதென்று
தேடும் போது
விட்டு விலகுபவைகள்.

புழுவைப் போலவே, புழுவின் தடத்தில்

சிறு எறும்புகள் சேர்ந்து

ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன.

கவிழ்ந்தபுழு  இறந்தது போல

சுருண்டு நடிக்கிறது.

விடாது எறும்புகள்

மொய்த்துக் கொல்கின்றன

புழு வேதனையில்

புழுவாய்த்துடித்துச் சாகிறது

கண்களுக்குத் தெரியா

எறும்புகளின் வாய்கள்

புழுவின் தசைகளை

அரித்துத் தின்கின்றன

பிறகு

கருணையின் தூதுவர்கள் போல்

எறும்பின்சாரைகள்

புழுவைப் போலவே, புழுவின் தடத்தில்

ஊர்ந்து செல்கின்றன

இன்னொருபுழுவைத்தேடி

 

நன்றிதிண்ணை .காம்

Friday, December 24, 2010

வைக்கோல்கன்று

முலைக்காம்புகளில் பால்துளிர்க்க
பிரசவ மயக்கம் கலைந்தெழும் தாய்க்கு 
எப்படிச்சொல்வேன் ?
பஞ்சு வைத்து தைத்த பொம்மையை 
உன் குழந்தையென்று 

Thursday, December 23, 2010

ஒன்றுதான்

தெருவெங்கும் பூக்கள்
சவம் போயிருக்கும் என்றார் ஒருவர்
இல்லை தலைவர் வந்திருப்பார்
என்றார் இன்னொருவர்
இரண்டும் ஒன்றுதான்
என்றேன் நான்

Wednesday, December 22, 2010

பொற்றாமரைக்குழந்தை

தொட்டில் குளத்தில்
கைகால் உதைத்து
சிற்றலைகளை எழுப்புகிறது
ஒரு பொற்றாமரைக்குழந்தை

திரும்பிய காலை வணக்கம்


அதிகாலை நடையில்
காலைவணக்கம் சொல்லிச்சென்றவர்
சட்டென திரும்ப வந்து
மன்னிக்கவும்
என் நண்பனை போலிருந்தீர்களென்று 
என் இனிய காலைப்பொழுதின்
தன் காலை வணக்கத்தை
திரும்ப எடுத்துச்சென்றார்!

Sunday, December 19, 2010

சிறு கவிதைகள் 2

நூறு பிறைகள் கண்டவர் என்றார்கள்
எப்போதாவது 
ஒருநிறை நிலாவை ரசித்ததுண்டா ?
கேட்கத் தோன்றியது.

த்ரீ ரோசஸ்
திடமானது ,
சுவையானது ,
மனமானது.
மேலும் நிபந்தனைகளுடன் கூடியது
 காதலி  தருகிற முத்தம்

Saturday, December 18, 2010

ஆட்டம்

குதி காலயுர்த்தி அதன் விளிம்பில் அமர்ந்தவாறு
கன ரக சாவியொன்றை தரை மண்ணில் கிளறியபடி
களபரிசோதனையாளன்
டாஸ் வென்ற குழு முதலில்
பந்து வீச்சை தேர்ந்து எடுக்கலாம்
ஆட்டத்தின் தொடக்கதிலேயே
விக்கெட்டுகளைச் சாய்க்கலாமென்றும்
பந்து காற்றில் திசை மாறி சுழலுமென்றும்
மட்டையாளர்கள் நன்கு ஆடும் பட்சத்தில்
இக் கணிப்புகள் மாறலாம் என்றும்
தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறான்
சிறியவிளம்பர இடைவேளைக்குப் பிறகு
நடக்க இருந்த ஆட்டத்தைக் காண
ஆவலோடிருந்த தருணத்தில்
ஏற்கனவே தொடங்கியிருந்தது
ஆடு களத்தில்
மழையும், காற்றும் தனது ஆட்டத்தை

Friday, December 17, 2010

சிறு கவிதைகள்

 1.நீ சுண்டியதில் 
பூ விழுந்தது 
கூடவே சில  பசுந்தளைகளும்
  
2. நீ சுண்டியதில் தலை மேல்
பூ விழுந்தது

Wednesday, December 15, 2010

பொம்மையின்குழந்தை

தன்னோடு வைத்து விளையாட
அதற்க்கு தலைசீவி உடை அணிவிக்க
மடியமர்த்தி சோறுஊட்ட
மிதி வண்டி பயணத்தில் பின்அமர்த்த
இறுகி அணைத்துறங்க
பிரியத்தில் முத்தமிட
கோபத்தில் வீசி எறிய
ஒரு குழந்தை இவ்வுலகில்
தன்னுடையது என்று சொந்தமாகிக்கொள்ளவிரும்பும்
ஒரு குழந்தைபொம்மையை  
செய்கிறான்பொம்மை தயாரிப்பவன்
அதில் தன் இறந்துபோன மகனின்
சாயலிருப்பதைக்கண்டு 
கண்ணீர் உகுக்கிறான்   

Monday, December 13, 2010

ரசனை

நுறு பிறைகள் கண்டவர் என்றார்கள்


கேட்க தோன்றியது

எப்போதாவது

ஒருநிறை நிலவை ரசித்ததுண்டா என்று

Sunday, December 12, 2010

திடமானது ,

திடமானது


சுவையானது

மணமானது

மேலும் நிபந்தனைகளுடன் கூடியது

காதலி தருகிற முத்தம்

Thursday, December 9, 2010

பூ விழுந்தது

நீ சுண்டியதில்


பூ விழுந்தது

கூடவே சில பசுந்தளைகளும்

Sunday, December 5, 2010

கேட்கத் தோன்றியது

நூறு பிறைகள் கண்டவர் என்றார்கள்


எப்போதாவது

ஒருநிறை நிலாவை ரசித்ததுண்டா ?

கேட்கத் தோன்றியது.