Thursday, January 31, 2013

நமது பிரிவு






எதிரெதிர் ரயிலில் 
ஜன்னலோர இருக்கைகளில் நாம்
எந்த ரயில் புறப்பட்டதென்று
தெரியவில்லை காட்சி மயக்கத்தில் 
உருண்டு நழுவுகிறது 
தண்டாவாளங்களில் ரயில் 
நம் பிரிவை நிஜமாக்கியபடி.



உதிரும்வேளை








ஒரு பூ
உதிரும்வேளை
இலைகள் பதறுகின்றன
செடி கதறுகிறது
நிலம் நடுங்குகிறது.

Wednesday, January 30, 2013

ஆதியில்








ஆதியில் முத்தமிருந்தது
அது 
தேவதையோடிருந்தது.

Monday, January 28, 2013

கல் விழுந்தகண்ணாடி







கல் விழுந்தகண்ணாடியில்
தெரிகிறது 
உடைந்து மலர்ந்த 
ஒருபுள்ளிக் கோலம். 
அல்லது 
சிலந்தி பின்னிய
வலை.

Wednesday, January 23, 2013

வலி











தாயின் இழப்பு அறியாது 
சிரிக்கிறது குழந்தை 
இனி 
பசிக்குஅழும் போது
பழக்க வேண்டும்
அதன்கட்டை விரலை
அதற்கு.

Monday, January 21, 2013

பறவையை வரைகிறாய்.







நான் 
ஒரு பாடலை எழுதுகிறேன்.
அதற்குள் 
நீ 
ஒரு பறவையை வரைகிறாய். 
இப்போது
உன் பறவையின் அலகில்
என் பாடலின் வரிகள்.

Friday, January 18, 2013

பூனை மொழி









பூனையின் மொழியைக் 
கற்றுக்கொண்ட மகள் 
பாலருந்த 
மியாவ் என்கிறாள் 
அவளுக்காக வைத்திருந்தபாலை
பூனை அருந்தி விட
நான்மியாவ், மியாவ் என்கிறேன்.

Thursday, January 17, 2013

பிடித்தகோலம்








இன்றுஎன்ன 
கோலமிடலாம்? 
என்று
விரல்நுனிமாவோடு
தரை குனிந்து யோசிக்கும் 
சாந்தியக்கா அமர்திருந்த
கோலம் பிடித்திருந்தது.








Sunday, January 13, 2013

வரைபடம் வரைய.







தூரிகை வேண்டாம் 
வர்ணங்களும் வேண்டாம் 
இறகு இருந்தால் போதும் 
எல்லையற்ற வானில் 
வரைபடம் வரைய.

Friday, January 11, 2013





 சீவப்படாத பென்சிலுக்குள்
 சில நூறு சித்திரங்கள்.