Tuesday, April 19, 2011

உயிர் பிரிந்த பாதை







நெரிசலில் புழுங்கியிருந்த
தார் சாலைவிபத்து ஒன்றில்

மிடறு தண்ணீரோடு இளைப்பாறி
உயிர்  பிரிந்த இடமெங்கும்
உன் ரத்தம்.

தினமும் அவ்விடத்தை
கடக்க நேர்கிற போது
ஆறாத காயங்களோடு பதைபதைக்கிறேன்.

சிறு மழையேனும் பெய்து
அச்சுவடு கரைத்தால்
துயர் நீக்கிய வடுக்களோடு
கடந்து பயணிக்ககூடும்.

இருப்பினும்
ஒரு விபத்து போலாவது
வருவதில்லை மழை

Monday, April 18, 2011

ஒரு புன்னகை கைவிரித்துஅழைக்கிறகுரல்.







ஒரு புன்னகை
கை விரித்து
அழைக்கிற குரல்.

பக்கம் வந்து
தோளைத்தொடுகிற
பவிசான தளிர்விரல்கள்.

பேச்சின் நடுவே
வருகிற பிஞ்சுசிணுங்கல்

விசுகிற விசிறிக்கு
காற்றுவந்து கட்டுப்படுகிற மாதிரி
உன்னிடத்தில் நான்
.
இன்று
உன் ஞாபகத்தின்
சௌகர்யமான இருக்கையில்
அமர்ந்திருக்கிறேன்.
கையில்

உன் பிரியத்தை சொல்ல வந்த
வாழ்த்து அட்டையுடன்.    

Saturday, April 16, 2011

மறதி







மறதியில்
மாற்றி அணிந்து கொள்கிறோம்
அடுத்தவர் மிதியடிகளை.

பூட்டிய கதவுகளுக்கு எதிரே
இழந்து தவிக்கிறோம்
மறந்து தொலைத்த சாவிகளை.

மறந்து நுழைந்து விடுகிறோம்
அடுத்தவர் அறைகளில்.

கை மறதியில் வைத்து விட்டு
புரட்டிப்போடுகிறோம்
அடி முதல் நுனி வரை.

வழிக் குருடில்
வந்து சேர்ந்து விடுகிறோம்
உலகின் விளிம்புகளுக்கு.

மீளாதமறதியில்
மீண்டுபோய் விடுகின்றன
நாம்சேர வேண்டிய இடங்கள்.  



Friday, April 15, 2011

வந்த விமர்சனம்






கவிதைத் தொகுப்பு
கிடைக்கப் பெற்றேன்.

வருத்தங்கொள்ள வைத்தது. 
வருகிற வழியிலேயே
அது புழங்கப்பட்டிருந்தது தெரிந்து.

முதல் பக்கத்திலேயே 
தேநீர் சிந்திய தடயங்களிருந்தது
.
சில பக்கங்கள்
மடங்கியிருந்தது.

முனை மழுங்கியிருந்தது
.
பின் அட்டை புகைப்படத்தில்
உன் முகத்தில்
கவலைரேகை படர்ந்திருந்தது.

மற்றபடி
தொகுப்பு கிடைக்கப்பெற்றேன்.
 நன்றி வணக்கம்

Tuesday, April 5, 2011

குறுங்கவிதைகள்







பூவின் சித்திரத்தை
மண்ணில் பதித்தப்படியே
நடக்கிறது பூனை.


ஈரச்சாலை
ரப்பர் செருப்பின் தாளலயம்
வெள்ளைவேட்டியில்
சேற்றுப்பூக்கள் மலருகின்றன.


வரிசையாகக் கனிந்தது
உதிர்கின்றன
கம்பி மரத்திலிருந்து
நீர்க்கனிகள்.


மெலிய உதடுகளின் மேல்
பற்கள் நடந்து போன
கால் தடம்.



சாரலக்குபின் மழை
முத்ததிறக்குப்பின் புணர்ச்சி.