Wednesday, January 26, 2011

ஞானம்






எல்லாச்சிறகுகளும்
உதிர்ந்த பிறகே
சொல்லித்தரப்பட்டது
பறப்பது எப்படி?

Tuesday, January 25, 2011







ஒழுகுகிற கூரையை
அடைக்கமலிருந்தேன்
ஒழுகுகிறது
நிலா வெளிச்சமும்

சாட்சிகள்








ஒன்றையடுத்து ஒன்றாய்
உதிர்கிறது
பழுத்த இலைகள்.

வயதாகி விட்ட தென்கிறாய்
உலர்ந்த அம மரத்தை
நோக்கியபடி.

நஞ்சாகிப்போன அடி மண்ணில்
தன் மூச்சை நெரிக்கிற
வேர்களின் கேவல்
கேட்கிறது எனக்கு.

Sunday, January 16, 2011

உன் இழப்பு






உன் இழப்பை
எப்படிச்சொல்வது

சற்றைக்குமுன்
தன்இருப்பை காலிசெய்துகொண்ட
குறை சிசுவினுடைய

என் கருப்பை வெறுமையைப்போல

Friday, January 14, 2011

சம்பவம்







வருகையாளற்ற
நூலகஅறை மூலையில்
கையொப்ப பதிவேட்டிற்க்கருகில்
கயிற்றில் தொங்கிவிட்டது
கருப்பு சிவப்பு கோடு போட்ட
கேம்லின் பென்சில்

Thursday, January 13, 2011

ஒரே கணம்








ஒரே கணத்தில் நடந்தேறி விடுகின்றது
தொப்புள் கொடியை அவிழ்த்தபடி 
ஒருசிசு இம்மண்ணில் விழுவதும்.

தூக்குக்கயிற்றை
சுருக்கிட்டுக்கொண்டு
ஒரு உயிர்
இம்மண்ணிலிருந்து விடுபடுவதும்  

Wednesday, January 12, 2011

நிலவொளியில் காய்கின்றன







அப்பாவின் ஆடைகள்
அவரைப் போலவே 
விரைப்பாய்க் காய்கின்றன

அம்மாவின்   புடவைகள்
அவளின் சுபாவம் போலவே 
 நெளிந்து    தவழ்கிறது

அக்காவின் தாவணி
அடுத்தநிமிடத்தில் பறக்கஇருக்கிறபறவையைப்போல
சற்று தள்ளி படபடக்கிறது  

தம்பியின் ஆடைகள்
எக்களித்து உரசியவாறு

இரவு நிலவொளியில் காய்கின்றன  
எடுக்க மறந்த
எங்களின் நேற்றைய உடுக்கைகள்  

Tuesday, January 11, 2011

சித்திர வாதைகள்






எரியூட்டப்பட்ட சித்திரத்திலிருந்து
வெப்பம் தாங்காது
சிறகசைத்து வெளிப்பறக்கிற
பறவைகளுக்கு
அடுத்த குடியிருப்பை
எம்மரத்தில் வரைவேன் ?

Sunday, January 9, 2011

விசனம்







பயணிகளில்லாத  
பேருந்திலேறி
பிச்சை கேட்கிற குருடனின் தட்டில்
விழுமா சில்லறைகள்?

Friday, January 7, 2011

உலகம் சுற்றும் குழந்தைகள்






நகரும் பொம்மைகள்,
உருளும் பந்துகள் ,
ஓடும் சிறுமிதி வண்டி
ஒரு வீடு மைதானமாகிறது.

மானைபோல் துள்ளல்,
தவளை  போல கனைப்பு
முயலைப்  போல்  தாவல்
ஒரு வீடு வனமாகிறது .

சிறு செப்பில்  மண் சோறு. 
 பச்சைப்  புல் துவையல்,
மழைத்தண்ணி  தேநீர்,
ஒரு வீடு  மணல்வீ டாகிறது.

மயிலிறகில் கீரிடம்,    
கண் மையில் மீசை,
மினுக்கும் அட்டைக்கத்திகள்
ஒரு வீடு  அரண்மனையாகிறது.

குழந்தைகள் வசிக்கிற ஒரு வீடு

ஒரு உலகமாகிறது

Wednesday, January 5, 2011

அம்மாவின் இசை









இரவில் செவிமடுக்கிறேன்.
தாழந்த குரலில்
முணுமுணுக்கிற வரிகளை

அதுஒரு பாடலல்ல,
விதிகளுக்கு உட்பட்ட
இசையுமல்ல.

அது தன்
நெடிய மௌனத்தை
உடைக்கிறமுயற்சி
சுமைகளைஅகற்றும் ஒருசாதுர்யம்
தற்காலிகமாய்
மூச்சுவிடுவதற்கான
ஒரு போராட்டம்.

உயிர்மையில் வெளியான எனது கவிதை
(அம்மாவுக்குச் சமர்ப்பணம்)

Tuesday, January 4, 2011

வீடு





வாடகை வீட்டிலேயே கழிகிறது வாழ்க்கை

மனைவிமட்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்

பிறரிடம்

எங்கவீட்டுக்காரர் என்று என்னை.

Monday, January 3, 2011

உதவும் விரல்கள்






கட்டைவிரல் ஆள்காட்டிவிரல்
சுண்டுவிரல் என்று
சொல்லிக்கொண்டு வந்த மனைவி
மோதிரவிரலை மட்டும்
அடகு விரலென்றாள்

Sunday, January 2, 2011

மடோனாவின் விரல் நுனி பட்ட செடி

 
 





மடோனா ஒரு செடியை நடுகிறாள்
அதனைச்சுற்றி
உயிர்மண்னணத் தூவுகிறாள்
அதற்க்குச் சிறிது நீரை வார்க்கிறாள்.
மடோனாவின் விரல் நுனி பட்ட செடி
தன் வேர்களுக்குச்சேதியை அனுப்புகிறது
அதிர்ந்த வேர்கள்
கிளைகளுக்கும்,இலைகளுக்கும்
நடனத்தை அனுப்புகிறது.
காற்றில் களி நடனம் புரிகிறது செடி 
சட்டென்று
பரவசத்தில் பூ ஒன்றைப்பூத்து விடுகிறது
பூவில் துளித்தேன்ததும்புகிறது.
 மடோனாவின் பாடலைப்போல

(செய்தி மடோனாமரம் நட்டார்)