Friday, December 28, 2012








அரிந்தமீனுக்குள்
பார்த்தேன்
ஒரு கடலின் 
சீற்றத்தையும் 
ஒரு குளத்தின் 
மௌனத்தையும்

Thursday, December 27, 2012






அவிழ்த்து மேய்த்த 
மந்தைகளை 
இழுத்து வருகிறது 
இடையனின் புல்லாங்குழலிசை.

Thursday, December 20, 2012

அவரவர் ப்ரியம்







நீராடி நீந்துவதும் 
இறைத்துக் குளிப்பதும்
அவரவர் ப்ரியம் 
அதன் பாட்டுக்கு
ஓடுகிறது நதி.

Monday, December 17, 2012

மழை






ஒவ்வொரு படியாக 
குதித்துக்குதித்து இறங்குகிறது 
தளிர்மழை 
பார்த்து, பார்த்து என 
தவிக்கிறது 
தாய் மழை

Saturday, December 15, 2012

புழுநகர்கிறது







புழுநகர்கிறது 
பசியஇலையின்
பேரமைதிமீது.
உடலைச்சுருக்கி
உந்தியுந்தி செல்கிறது 
மூடிய இமைகளுக்குள்
உருளும்துறவியின்
விழிகளைப்போல.

Thursday, December 13, 2012

மண் பறவை



மண் பறவை 
கைநழுவி 
உடைந்து விட்டது. 
தரையில் 
அதன் சிறகுகள்
தழுவிக் கொண்டது தாய் மண்ணை. 

Saturday, December 8, 2012

பிரிகின்றன மேலும்





வழியனுப்ப வந்தவள் 
விடை பெறுகிறாள் 
அழுதவாறு.

விடைபெற்றுக்கொண்டவன்
வழியனுப்புகிறான் 
கண்ணீரோடு.

ஒருவழி
நீள்த்தண்டவாளங்களாகவும்
இன்னொருவழி
தார்ச்சாலைககளாகவும்
பிரிகின்றன மேலும்
நனைகின்றன மழைநீரி

Sunday, December 2, 2012

இரு தலையணைகள்






நாம் 
தலைசாய்த்த
தலையணைகள் 
உறங்குகின்றன 
ஒன்றின் மீது ஒன்று 
தலை சாய்த்து.