Wednesday, June 30, 2010

பால பாடம்










துப்பாக்கியை. நெஞ்சக்கு நேர் நீட்ட


இரு கைகளையுயர்த்தினேன்

பொம்மைதுப்பாக்கியென்று

சிரித்தான் மகன்

தெரியுமென்றேன்

எப்படி என்றான்?

நிஜ துப்பாக்கிகள்

ஒருபோதும் சொல்லிக்கொண்டு

வெடித்துக்கொல்வதில்லை மகனே என்றேன்
 
 
 கீற்று .காமில்வெளியான கவிதை

Wednesday, June 23, 2010

கழுவும் கைகள்











உங்களுக்கு உகுக்கவேண்டியக்கண்ணீர்த்துளிகள்

ஆவியாகிவிடுகின்றன

உங்கள் உரிமைக்கு உயர்த்தபடவேண்டிய கைகள்

ஒன்றையொன்று கழுவிக்கொள்கின்றன

உங்களை ஆற்றுப்படுத்தச்சொல்லவேண்டிய சொற்கள்

சிறுமூச்சாய் வெளியேறுகிறது

உங்களுக்குச்சிந்தப்படவேண்டிய சகோதரக்குருதி

உள்ளுக்குள் உறைந்துவிடுகிறது

இதுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது

வீழ்ந்த எங்களின்நிழல்களின் பேரழிவை

செவிட்டூமையாகப் பிறந்து

தன் பார்வையையும் இழக்கத்தொடங்குகிறது

இந்தகவிதையும்    எங்களைப்போல


           keetru.com ல்வெளியானது








இலைதழைகளைபகிர்ந்துண்ட


ஆட்டின்கழுத்து

அறுபட்டதைக்கண்டபிறகு

கத்தி அழைக்கவில்லை

வெள்ளாட்டுக்குட்டிகள்

தம்அம்மாவை

Wednesday, June 9, 2010

விட்டு விலகி
















கத்தும் கன்றுகளைக்கடந்து
பசியபுல்வெளியைக் கடந்து


வைக்கோல் போர்களைக்கடந்து

அருந்திக் குளித்துமகிழ்ந்த

குளத்தைக்கடந்து

வீழ்ந்தமரத்தில்

தான்வாழந்த இடத்தை

வெறித்து நோக்குகிற

ஒரு பறவையைப்போல்

விழி பிதுங்கி நுரைசிதற

அசை போட்டவண்ணம்

அண்டை மாநிலத்திற்கு

லாரியில் அடிமாடாய்ப்போகிறது

விற்று காசக்கிவந்த

எங்கள்வீட்டு லட்சுமி

Tuesday, June 8, 2010

காற்றின் திசையில்

  









சிற்றோடை

சிற்றோடையின் மீது சிறுஇலை

இலைப்படகின்மீது கட்டெறும்பு

கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு

சின்ஞ்சிறு பாரத்தோடும்

மெலிதானத் துடிப்போடும்

காற்றின் திசையில்

நகர்ந்தபடி இருக்கின்றது

அதன் பெருவாழ்வு
 
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை
 
 
 


Saturday, June 5, 2010











 சின்னக்குழந்தை


தன் சின்னச்சின்னப் பாதங்களை

இப்பூமியல் எடுத்துவைக்கிறது

வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்

அதன் பாதணியிலிருந்து

சீழ்கையொலி எழும்புகிறது

பிஞ்சின் நடை பதற்றம் கண்டு

தாயன்பு தவிக்கிறது

சின்னக்குழந்தை

சிரித்தபடி நடக்கின்றது

சங்கீதத்தின் மீது
 
 
உயிர்மை மற்றும்ஆனந்தவிகடனில் வெளியானகவிதை

Wednesday, June 2, 2010

                     








                                                              
                                                             
                                                             
                                                                                                     
காற்றில் மிதக்கின்றன


சோப்பு வர்ணக்குமிழிகள்

வாட்டர் பலூனென்று

புதியசொல்லை அறிமுகம் செய்கிறாள்மகள்