Thursday, March 15, 2012

சிறது தூரம்தான்


பிறந்த குழந்தையை 
பிரசவ வார்டிலும்
 
இறந்த முதியவரை 
மார்ச்சுவரியிலும்   
 
ஒரே தினத்தில் 
பார்த்து வர நேர்ந்தது
 
வீடு திரும்புகிறேன்
 பேரதிர்ச்சியோடு 
சிறது தூரம்தான்
வந்த இடத்திலிருந்து 
செல்கிற இடத்திற்கு 




Thursday, March 8, 2012

ஒருகணச் சிற்றசைவு








மாலை வேளை
நீ அருந்தக் கொடுத்த
தேநீரில் அவ்வளவு சுவை 


மெதுவாக ஆரம்பித்த பேச்சில் 
அப்படியொரு அணுக்கம் 


ஒரு கணத்து சிறு அசைவு 
எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது 


வருடிக்கொடுத்த விரல்களை 
அவ்வளவு  வெடுக்கென்று
விலக்கி கொள்ளதிருக்கலாம் நீ 


யாருமற்ற வாசல் நிலைப்படியில்
நின்றவாறு
நீ விடை கொடுத்தத்தருணம் கூட 
அதற்க்கு வாய்த்திருந்தது


அப்பொழுதேனும்
நாம் முத்தமிட்டு கொண்டிருக்கலாம் .


நன்றி உயிர்மை இதழ்  








நீந்தும் மீன்களை
விழி விரிய
வியந்து வியந்து பார்க்கிறாய்!

சட்டென்று
விரிந்த விழிகளிலிருந்து
கருப்பு வெள்ளை கலந்த
மீன்கள் ரெண்டு
குதிக்கிறது
மீன் தொட்டிக்கு!


நன்றி உயிரோசை இணயஇதழ்

Wednesday, March 7, 2012

கல் எறிந்தவர்கள்










பிளாட் பாரத்திலிருந்து
பிரிகிறது ரயில்

ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல்!

கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்

நன்றி நவீன விருட்சம்