Tuesday, November 29, 2011

எறும்பின் தடத்தை







   எறும்பின் தடத்தை
தேடிப்போவேன்
பல நாட்கள்
என்னைத்தேடி
எறும்புகள்வந்தன
ஒர் நாள்.



எல்லா இலைகளையும்
உதிர்த்து விட்டு
நிற்கிறது
ஒரு புத்த மரம்

உனக்குச் சம்மதமெனில்
முயன்று பார்
ஒரு முறை
அரிது அரிது
மானிடராய்ப் பிறப்பது


முதலின்
முதல் தான்
முடிவின்
முடிவு

பிறந்த தினத்திற்கு
மறு தினம்
தேதி காகிதத்தைக்கிழிக்கும் போது
ஒரு வருடமும் சேர்ந்து
கிழிந்து விடுகிறது


              

Monday, November 21, 2011

கையளவு நிலத்தில்சிறு குழந்தை










வானளவு பரப்பில்
கையளவு நிலம்

கையளவு நிலத்தில்
இரண்டடி மணற்க்குழி

உறங்கும் பாவனையோடு
இறந்த குழந்தை

தாயின்இடுப்பிலிருந்து
மண்தொட்டிலுக்கு.

யாருக்கும் தீங்கிழைக்காத
ஒரு சுருண்ட புழு

ஒருஈன்ற கனி

ஒருஉலர்ந்த விதை

மேலிருந்து பரிதவிக்கும்
தாயின் ஓலத்தை
செவி மடுக்க,
ஆறுதலைஅளிக்க
 யாருமில்லை


இம்மண்ணின் மீது
நடையிடுகிற
இதய மற்றவர்களின்
காலடியோசைகளை
காதுற்ற படியே

இன்று
மண்ணோடு மண்ணாகிறது
சிறு குழந்தை

Thursday, November 17, 2011

கை மாறும் கணங்கள்








முகராத பூ காற்றின்
வாசத்தோடு பேசிவிடுகிறது

இழுபறி நிலை
இறுதி முடிவிற்குவருகிறது

ரகசியமொன்று நெகிழ்ந்துபோய்
எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது

உதற இயலாதவொன்று
நிழலின் சாயாலாகி அச்சமூட்டுகிறது

யாரும் காணதகணமொன்று
சட்டென கைமாறிவிடுகிறது

பிறகு
சேவல் சிறகை
பூனையின் காலடியில்
காண நேர்ந்து விடுகிறது

இம் மாத உயிர்எழுத்தில்வெளியானஎனது கவிதை

Wednesday, November 9, 2011

ஒரு விதை விழுகிற இடத்தில்






 ஒரு விதை
விழுகிற இடத்தில்
பூமி நெகிழ்ந்து கொடுக்கிறது

காற்று
அவ்விதைக்கு
ஜீவனைஅளிக்கிறது

முகில் கூட்டம்
மழையை அனுப்புகிறது

கதிரவன்
வெதுவெதுப்பைத்தருகிறது
 
அந்த இடமே
பரிசுத்தமாகிறது

பிறகு
அங்கு ஒரு பிரசவம் நிகழ்கிறது

Monday, November 7, 2011

விலகா நினைவு




எப்பொழுதும்
எங்கள்நெஞ்சில்துஞ்சியகுழந்தையை
மண்அடுக்குகளின் கீழ்
புதைத்து விட்டு
வெறுமையோடு
வீடுதிரும்புகிறோம்
மயானத்திலிருந்து.
தோள்களில் இன்னும் ஊர்கிறது
எறும்பைப்போல

குழந்தையின்
மெல்லிய மூச்சுக்காற்று.
(நன்றி திண்ணை இணைய இதழ்) 



Thursday, November 3, 2011

ஒரு சொல் சில சந்தேகங்கள்







ஒரு சொல் இதயத்தைத் துளைக்கிறது

ஒரு சந்தேகம் நிழல் போல்த்தொடர்கிறது

ஒரு சந்தர்ப்பம் உறுதியைக்குலைத்து விடுகிறது

ஒரு பெருமுச்சு அனைத்தையும் பேசிவிடுகிறது

ஒரு கண்ணீர்த்துளிசில கப்பல்களைக் கவிழ்த்துவிடுகிறது
  
ஒரு குற்றம் மன்னிப்பை மலினப்படுத்துகிறது

ஒரு பொய் தன் நாவை அறுத்துக்கொள்கிறது
  
ஒரு குழந்தைஇதயம் எல்லாவற்றையும் நம்பிவிடுகிறது

ஒரு ஆசை அடங்குகையில் ஆநித்திய ஆசைகளை எழுப்பிவிடுகிறது.


 இம்மாத (நவம்பர்) உயிர் எழுத்து இதழில் வெளியான எனது ஒரு கவிதை 

Tuesday, November 1, 2011

குறுவாளின் கதை




அதில் காய்களை
உரிக்கிறாய்
பழங்களை
துண்டுகளாக்குகிறாய்

பால்கட்டிகளை,
கேக்குகளை
நேர்த்தியாய் அதில்
பிளக்கிறாய்

 அதன் பளபளப்பில்
 முகங்கண்டு மகிழ்கிறாய்

  கன்னத்தில் அழுத்தி
 அதன் குளிர்ச்சியை உணர்கிறாய்

அது
உனக்கெப்போதும்
உரைத்ததேயில்லை
ஆதியில்  
குருதி பருகிவளர்ந்த
குறுவாளென்ற கதையை.