Friday, October 26, 2012

பகிர்ந்த முத்தங்கள்



இன்று
உன் சாயல்
கொண்டவளோடு செல்கிறேன்

எனதுசாயலோடு
இருப்பவனுடன்
நீ இருக்கக் கூடும்

புலப்படாத தொலைவுகளில்
நாம்
பகிர்ந்து கொள்ளும்
சில முத்தங்கள்
நம் முத்தைஒத்திருக்கின்றன

அம் முத்தங்கள்
சற்று கூசுகின்றன எனக்கு.  
.
  (இம்மாதஉயிர்மை  இதழில் வெளியான எனது கவிதை)  .                 

Wednesday, October 24, 2012

உரையாடலின் சாம்பல்.







நமது உரையாடலுக்குநடுவே 
இருமீன்கள் 
நீந்தியபடியேஇருந்தன 

இடவலமாக ஒருபறவை
பறந்துபோனது

அந்தி மந்தாரையிலிருந்து
ஒருஇதழ்
தரைக்கு மிதந்துவருகிறது

இதுவரை
நான்கு தேன்நிற
தேநீர்க்கோப்பைவட்டங்களை
மேசையில் விட்டுச்சென்றிருந்தான்
டீக்கடைச்சிறுவன்

காலடியின்கீழ்
உதிர்ந்துகிடந்தன
நமதுஉரையாடலின் சாம்பல்.





(இம்மாதஉயிர்மை  இதழில் வெளியான எனது கவிதை) 

Monday, October 8, 2012

நீரின் வரைபடம்

   




 உணவு மேசையில்
சிந்திய நீரில்
வரைந்து காட்டிக்கொண்டிருகிறாய்
உனது வீட்டிற்கான
வழித்தடங்களை

விரல்கள்வரைந்துகொண்டிருந்த
கோடுகளின் பாதைகளில்
உனக்கு முன்னே
உன் வீட்டை அடைந்திருந்தது
சிந்திய அந்நீர்த்துளி  


(இம்மாதஉயிர்மை  இதழில் வெளியான எனது கவிதை) 

Monday, October 1, 2012

ரேகைகளை வாசிப்பவன்

 

விரிந்த 
உள்ளங்கையில் 
ரேகைகளின்தடங்களை உற்றுநோக்குகிறான் 

மேடுகளை நீவி
பள்ளங்களில் நிரப்புகிறான்

செடி வேர்கள் போல
கிளை பிரிந்து செல்லும்
ரேகைகளின் பாதைகளில்
ஒரு சிற்றெம்பைப்போல்
ஊர்கிறான்


அன்றாடச்சுமையோடு
உள்ளங்கைக்கதவைத்திறந்து
உள்ளே இருப்பவனிடம்
யாசிக்கிறான்
தன்
ஒரு கவளச்சோற்றுப்பசிக்கு