எதிரெதிர் ரயிலில் ஜன்னலோர இருக்கைகளில் நாம் எந்த ரயில் புறப்பட்டதென்று தெரியவில்லை காட்சி மயக்கத்தில் உருண்டு நழுவுகிறது தண்டாவாளங்களில் ரயில் நம் பிரிவை நிஜமாக்கியபடி.
ஒரு பூ
உதிரும்வேளை
இலைகள் பதறுகின்றன
செடி கதறுகிறது
நிலம் நடுங்குகிறது.
ஆதியில் முத்தமிருந்தது அது தேவதையோடிருந்தது.
கல் விழுந்தகண்ணாடியில்
தெரிகிறது
உடைந்து மலர்ந்த
ஒருபுள்ளிக் கோலம்.
அல்லது
சிலந்தி பின்னிய
வலை.
தாயின் இழப்பு அறியாது சிரிக்கிறது குழந்தை இனி பசிக்குஅழும் போது பழக்க வேண்டும் அதன்கட்டை விரலை அதற்கு.
நான் ஒரு பாடலை எழுதுகிறேன். அதற்குள் நீ ஒரு பறவையை வரைகிறாய். இப்போது உன் பறவையின் அலகில் என் பாடலின் வரிகள்.
பூனையின் மொழியைக் கற்றுக்கொண்ட மகள் பாலருந்த மியாவ் என்கிறாள் அவளுக்காக வைத்திருந்தபாலை பூனை அருந்தி விட நான்மியாவ், மியாவ் என்கிறேன்.
இன்றுஎன்ன கோலமிடலாம்? என்று விரல்நுனிமாவோடு தரை குனிந்து யோசிக்கும் சாந்தியக்கா அமர்திருந்த கோலம் பிடித்திருந்தது.
தூரிகை வேண்டாம் வர்ணங்களும் வேண்டாம் இறகு இருந்தால் போதும் எல்லையற்ற வானில் வரைபடம் வரைய.
சீவப்படாத பென்சிலுக்குள்
சில நூறு சித்திரங்கள்.